நீரோட்டம் பார்க்காமல் போர்வெல் கோவிலம்பாக்கத்தில் ரூ.6 லட்சம் வீண்
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தில், நீரோட்டம் பார்க்காமல், 5.8 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள 'போர்வெல்'லில் ஒரு துளி கூட தண்ணீர் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இப்பகுதியினர் பயனடையும் வகையில், மத்திய நிதிக்குழு மானியம் 2024- - 25 கிராம ஊராட்சி வரையறுக்கப்பட்ட நிதியின் கீழ், 5.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் இணைக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இப்பணி துவங்கும் போதே, இங்கு நிலத்தடி நீரோட்டம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், மாற்று இடத்தில் அமைக்குமாறும், சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், அதை பொருட்படுத்தாத அதிகாரிகள், 200 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் இணைத்துள்ளனர். ஆனால், அமைத்து மூன்று மாதங்களாகியும், ஒரு துளி கூட தண்ணீர் வரவில்லை. மக்கள் பயன்பெற அரசு ஒதுக்கிய நிதியை, பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மட்டுமே, நிலத்தடி நீரோட்டம் பார்க்காமல் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்கு பலனில்லாமல் போனதோடு, 5.8 லட்சம் ரூபாய் நிதியும் வீணடிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பயன்பெற ஒதுக்கப்படும் நிதியை, அதிகாரிகள் சரியான முறையில் செலவிடாமல், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.