உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ.75,000 இழப்பீடு

எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ.75,000 இழப்பீடு

சென்னை, சுகாதாரமற்ற சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இருவருக்கு, எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை நிறுவனம், இழப்பீடாக, 75,000 வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடுங்கையூர் வாசுகி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ்.ஹைத ராபாத் பிரியாணி கடையில், 2014 செப்., 16ல், 370 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் பால்ஸ் வாங்கினேன். அந்த பிரியாணியை சாப்பிட்டதும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சுகாதாரமற்ற, கெட்டுப்போன சிக்கனை வழங்கியதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் வி. ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: பிரியாணி கடை தரப்பில் அளித்த விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. சுகாதாரமற்ற முறையில், பொது வெளியில் உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரியால், பிரியாணி கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரியாணி கடை உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததையும், சமையலறையை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். குளிர்சாதன பெட்டியில், பழைய உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். இதன்வாயிலாக, பிரியாணி கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரிக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரம் உள்ளது. எனவே, சேவை குறைபாட்டுக்காக, மனுதாரருக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கொடுங்கையூரை சேர்ந்த சின்னாண்டிமடத்தை சேர்ந்த ராதிகா என்பவர் தொடர்ந்த வழக்கிலும், அவருக்கு இழப்பீடாக, 50,000 ரூ பாய் வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை