சென்னை, சென்னையில், கடந்த இரு நாட்களாக, பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் இயக்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.இதுமட்டுமின்றி, மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணியர் 'ஓலா, உபேர்' போன்ற செயலிகள் வாயிலாக 'புக்கிங்' செய்து, வீட்டிற்கு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. சில வாடகை கார் ஓட்டுநர்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் எம்.டி.சி., எனும் மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, தற்காலிக சிறப்பு பேருந்து சேவையை நேற்று முன்தினம் இரவு முதல் இயக்கின.விமான நிலைய சர்வதேச வருகை முனையத்தில் இருந்து, மாநகர பேருந்துகளில் பயணியர் ஏற்றிச் செல்லப்பட்டனர்.வழக்கமாக, விமான நிலையத்திற்கு வெளியில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் நின்று செல்லும் பேருந்துகள், முனையம் உள்ளே வந்து, பயணியரை ஏற்றிச் சென்றதால் பலரும் பயனடைந்தனர்.இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:மழையின் தாக்கம் குறையும் வரை, விமான நிலைய வருகை பகுதியில் மாநகர பேருந்துகளை இயக்க அனுமதித்து உள்ளோம். மழை தாக்கம் குறைந்து, வழக்கமான சேவைகள் சீராகும் வரை, இந்த தற்காலிக வசதி தொடரும்.வரும் நாட்களில் மழை பாதிப்பு இருந்து பயணியர் செல்வதில் சிக்கல் நீடித்தால், இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை 21 பேருந்துகள், விமான நிலையத்திலிருந்து பிராட்வே, கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களுக்கு இயக்கப்பட்டன. நள்ளிரவில் பயணியர் சிரமப்பட்டதால், இந்த சிறப்பு ஏற்பாட்டை மேற்கொண்டோம்' என்றனர்.