அடையாறு முகத்துவார மணல் விற்பனை?
சென்னை: சென்னை அடையாறு முகத்துவாரம் துார்வாரி அப்புறப்படுத்தப்படும் மணல், கட்டுமான பணிகளுக்கு விற்கப்படுவதை தடுத்து, பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் வெளியேற்றப்படும் நீர், அடையாறு வழியாக கடலுக்கு செல்வது வழக்கம். இதற்காக, அடையாறு முகத்துவார பகுதிகளில் காணப்படும் மணல் குவியல்களை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் இதற்கான பணிகள் துவங்கின. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் இப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இதில், அடையாறு முகத்துவார பகுதிகளை, 200 மீட்டர் அதாவது, 656 அடி அகலத்துக்கு துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இப்பணியில் இங்கு சேகரிக்கப்படும் மணலை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, லாரிகள் வாயிலாக மணல் அப்புறப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, அனைத்து எம்-சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடக்கும் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மணல் அகற்றப்படுகிறது. இந்த மணலை லாரி ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பெறும் சிலர் அதை, ஆந்திராவில் இருந்து வரும் மணலுடன் கலப்படம் செய்து, கட்டுமான பணிகளுக்கு விற்கின்றனர். இதுகுறித்து, ஏற்கனவே அரசிடம் புகார் அளித்து இருக்கிறோம். இந்நிலையில், அடையாறு முகத்துவார துார்வாரும் பணியில் அகற்றப்படும் மணல், கட்டுமான பணிகளுக்கு சென்றுவிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இம்மணல் தவறான நபர்களிடம் செல்லாமல் தடுக்க வேண்டும். இந்த மணலை யாருக்கும் கொடுக்காமல், பாதுகாப்பாக இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.