மேலும் செய்திகள்
மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
05-Dec-2024
சென்னை, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியை, அதிகாரிகளை மிரட்டி எடுத்து சென்ற நான்கு பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், உதவி புவியியலாளராக பணிபுரியும் முரளி மனோகரன் என்பவர், கீழ்ப்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார்.அதில், கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் சாலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு, எனது தலைமையில் தனித்துறை தாசில்தார் அண்ணாமலை உள்ளிட்டோர் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக 'ஸ்ரீ விநாயகா' என்ற பெயர் எழுதப்பட்ட டிப்பர் லாரி, மணல் ஏற்றி வந்தது. லாரியை நான் மடக்கி சோதித்தேன். அதில், ஐந்து யூனிட் கனிமம் வகையாக சாதாரண மணல் இருந்தது. சோதனையில், அவற்றிற்கு 'பர்மிட்' எனும் உரிய அனுமதியில்லாமல் இருந்தது.இது குறித்து ஓட்டுனரிடம் விசாரித்தபோது, அந்த ஓட்டுனர் மொபைல் போனில் சிலரை அழைத்தார்.சில நிமிடங்களில், சம்பவ இடத்திற்கு காரில் வந்த நான்கு பேர் கும்பல், என்னையும், என்னுடன் இருந்த மற்ற அதிகாரிகளையும் மிரட்டி தாக்க முயன்றனர். பின், அங்கிருந்த லாரியை எடுத்து தப்பினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். கிண்டியில் பறிமுதல்
சென்னையில் உள்ள கட்டுமான பணிகளுக்கு, உரிய அனுமதி இல்லாமல் எம்.சாண்ட் மணல் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், நேற்று அதிகாலை, கிண்டி நோக்கி வந்த ஒரு லாரியை, முரளி மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மடக்கினர். அதில் உரிய அனுமதி இல்லாமல் எம்.சாண்ட் கொண்டு வந்தது தெரிந்தது. லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஓட்டுனர் அங்கிருந்து தப்பினார். லாரியை பறிமுதல் செய்த முரளி மனோகரன், கிண்டி போலீசில் ஒப்படைத்தார்.
05-Dec-2024