துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் வரி வசூல் பணிக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சியில், துாய்மை பணிக்கான மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், மேஸ்திரி ஆகிய 156 பேர், மாற்றுப்பணி அடிப்படையில், வரி வசூல் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மண்டலங்கள், அம்பத்துாரில் சில வார்டுகளில் குப்பை கையாளும் பணியை மட்டும், மாநகராட்சி செய்து வருகிறது. மற்ற 12 மண்டலங்களில், தனியார் நிறுவன பணியாளர்கள் குப்பையை அகற்றி வருகின்றனர். இம்மண்டலங்களில் துாய்மை பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவரும், தனியார் நிறுவன ஊழியர்களாகவே நியமிக்கப்பட்டு உள்ளனர். அதனால், மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 22 துாய்மை பணி மேற்பார்வையாளர்கள், 98 ஆய்வாளர்கள், 36 மேஸ்திரிகள் ஆகிய, 156 பேர், மாற்றுப்பணி அடிப்படையில், வரி வசூல் பணிக்கு இடமாற்றம் செய்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மாற்றுப்பணியில் ஈடுபட்டாலும், இவற்றை மேற்கோள்காட்டி, வருங்காலங்களில் பதவி உயர்வு கேட்கக்கூடாது. ஏற்கனவே வழங்கப்படும் ஊதியம் தான் வழங்கப்படும். இப்பணிக்காக சிறப்பு படிகள் ஏதும் வழங்கப்படாது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.