துாய்மை பணியாளர்கள் மண்டல அலுவலகம் முற்றுைக
ஓட்டேரி, திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, 'சமபந்தி விருந்து சாப்பிட்டு விட்டு, வயிற்றில் அடிப்பது நியாயமா?' என, முதல்வருக்கு, துாய்மைப்பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செங்கொடி சங்கம் சார்பில், அதன் சென்னை மாவட்ட பொதுச் செயலர் சீனிவாசலு தலைமையில் 50க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள், ஓட்டேரியில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டனர். மண்டலத்தில், துாய்மைப்பணியை தனியார் மயமாவதை கண்டித்து கோஷமிட்டனர். துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: முதல்வர் எங்களுடன் சமபந்தி விருந்து சாப்பிட்டு விட்டு, தற்போது தனியார் மயமாக்கி வேலை இல்லை எனக் கூறுவது நியாயமா? கடந்த 2021ல் தேர்தல் வாக்குறுதியில் பணி நிரந்தரம் எனக்கூறியது என்னவானது? முதல்வர் தொகுதியையும், சென்னை மேயர் வார்டையும் அமைச்சர் வசிக்கும் பகுதியையும் துப்புரவு பணியை தனியார் மயமாக்கியுள்ளனர். வரும் ஆக., 1ம் தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.