உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது

துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது

சென்னை: 'துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, உழைப்போர் உரிமை இயக்கம் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில், துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, போராடும் பணியாளர்கள், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அல்லது சிவானந்தா சாலை போன்ற பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் பொருளாளர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், 'ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க தயாராக உள்ளோம். மற்றவர்கள் போராட அனுமதி கேட்கக்கூடும் என்பதால், தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது' என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'அம்பத்துாரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் யூனியன் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக புதிய மனு அளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அம்பத்துாரில் உள்ள யூனியன் அலுவலகம் இருக்கும் இடம், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடமா? இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து, காவல் துறை தெரிவிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி