பணி நிரந்தரம் செய்ய கோரி துாய்மை பணியாளர்கள் பேரணி
சென்னை, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறி, 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், பேரணி நடத்தினர். சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அம்மண்டலங்களில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு பணியமர்த்தப்பட இருந்தனர். அவ்வாறு அமர்த்தினால், தங்களுக்கு ஊதியம் குறைக்கப்படுவதுடன், பணி பாதுகாப்பும் இல்லை எனக்கூறி, மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், துாய்மை பணியாளர்கள், 13 நாட்கள் தொடர் போராட்டங்களை முன் வைத்தனர். அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டாலும், தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் எல்.ஜி., சாலையில் இருந்து, ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வரை, 600க்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியாக சென்றனர். பின், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் கூட்டம் நடத்தினர். அப்போது, உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள் பேசும்போது, மழை பெய்தாலும், கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில், அரசமைப்பு சட்டம் வழங்கிய அறவழியில் போராடும் உரிமையை, தமிழக அரசு மறுத்து வருவதாக, உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.