தமிழ் வழி மாணவர்களுக்கு வைப்பு நிதி வழங்கும் பள்ளி
தாம்பரம்,கிழக்கு தாம்பரத்தில் இயங்கும் ஜெய்கோபால் கரோடியோ தேசிய மேல்நிலைப் பள்ளியில், 2025 - 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது. இதில், தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படுகிறது.மேலும், 6ம் வகுப்பில், தமிழ் வழி கல்வியில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு மாணவருக்கும், வங்கியில் 1,000 ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.அந்த மாணவர்கள், 10ம் வகுப்பு முடிந்து, பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் போது, இந்த நிதி பயன்பெறும்.முதல் நாளான நேற்று, 15 மாணவர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டது. இதில், பள்ளி செயலர் கிரிஜா சேஷாத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழ் வழி கல்வியில், எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்கள் அனைவருக்கும் வைப்பு நிதி ஏற்பாடு செய்யப்படும் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.