வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Dravida Model agenda
சென்னை:'சென்னை பள்ளிகளில், மாணவர்கள் வாயிலாக மாணவியருக்கும் போதை பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. டீக்கடை, பெட்டி கடைகளிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன' என, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம், ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, நிக்கோட்டின் கலந்த உணவு பொருட்களின் தீமைகள், பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆசிரியர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு பயிலரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், ஆசிரியர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.மேலும், வலி நிவாரணி மாத்திரை உள்ளிட்டவற்றை எவ்வாறு போதை பொருட்களாக பயன்படுத்துகின்றனர்; மாணவர்களை கண்காணிப்பது, தடுப்பது உள்ளிட்டவை குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, பயிற்சி கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வீனா பேசுகையில், ''தமிழக அரசு மற்றும் முதல்வர், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மிக தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக, அவ்வப்போது தலைமை செயலரும் தணிக்கை செய்கிறார். புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் அவசியம்,'' என்றார்.பின், ஆசிரியர்கள் சிலர் பேசியதாவது:ஒரு ஆசிரியர், 10 மாணவர்களை கண்காணிப்பதைவிட, பெற்றோர் கண்காணிப்பது எளிது. மேலும், ஆசிரியர்களால் மாணவர்களை அடித்து திருத்த முடியாத சூழல் உள்ளது.எனவே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுபோல், மாணவர்களின் பெற்றோருக்கும் பயிலரங்கம் நடத்த வேண்டும்.பள்ளிகளில், மாணவர்களின் வாயிலாக மாணவியருக்கும் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதும் சவாலாக உள்ளது. டீக்கடை, பெட்டி கடைகளில், விதிகளை மீறி, போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.புகையிலை பொருட்களை ஊக்கும்விக்கும் வகையில், சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் செயல்படுகின்றனர். அவ்வாறு ஊக்குவிப்போரின் பிள்ளைகளை வைத்து, புகையிலை பயன்பாட்டை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கு பதிலளித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பேசியதாவது:தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அருகாமை மாநிலங்களில் விற்பனை செய்ய அனுமதி உள்ளது.சென்னைக்கு அருகில் உள்ள பெங்களூரில் மலிவு விலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கிருந்து, காய்கறி லாரிகள், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் வாயிலாக, சென்னை மற்றும் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன.இவை, தமிழகத்தில் ஒரு பாக்கெட், 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.சிறுவயதிலேயே நிக்கோடின் பயன்படுத்தும் பெண்களுக்கு, கரு உருவாவதில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு கரு உருவானாலும், மூளையை பாதிப்பு ஏற்படவும், கரு கலையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, புகையிலை பயன்படுத்தும், மாணவ - மாணவியரை அடையாளம் கண்டால், அவர்கள் குறித்த விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுப்பட, மனநல ஆலோசகர் உள்ளிட்ட முயற்சிகள் எடுப்போம். அந்தந்த பள்ளிகளில், பெற்றோர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால், அவர்களுக்கும் பயிலரங்கம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புகையிலை பயன்பாட்டால், புற்றுநோய்கள் மற்றம் நெடுநாள் நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாய், தொண்டை, குரல் வளைப்பகுதிகளில் வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும், மூளை செயலிழத்தல், இதய ரத்தக்குழாய் நோய், நிமோனியா, காநோய், நுரையீரல் அடைப்பு, ஆஸ்துமா, சுவாச பாதை நோய்கள், மாரடைப்பு, ஆண்மையிழப்பு, கால் விரல்களில் அழுகிய நிலை ஏற்படுகிறது. பெண்களுக்கு மலட்டுதன்மை, கருச்சிதைவுகள், எடை குறைந்த குழந்தைகள் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
சென்னையில் இந்தாண்டில் இதுவரை 48,132 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், புகையிலை விற்பனை கண்டறியப்பட்ட, 1,290 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், 3.08 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அரசின் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
Dravida Model agenda