கடைக்குள் செல்லும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனி வழி
பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், 58வது வார்டு, பெருங்களத்துார், கிருஷ்ணா சாலையில், பேரூராட்சியாக இருந்த போது மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. அது சிறிதாக இருந்ததால், மழை காலத்தில் அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.அதனால், பழைய கால்வாயை இடித்துவிட்டு, புதிதாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, அச்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அற்றப்பட்டன.ஆனால், அங்குள்ள மூன்று ஆக்கிரமிப்பு கடைகளை மட்டும் அகற்றாமல், அந்த கடைகளின் கீழ் பகுதி வழியாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.சாலையின் மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், இந்த மூன்று கடைகளை மட்டும் அகற்றாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.நான்காவது மண்டல அதிகாரிகளின் இந்த சிறப்பான பணி, மாநகராட்சி கமிஷனருக்கு தெரிந்து நடக்கிறதா, இல்லையா என்ற கேள்வியும் வலுத்துள்ளது.எனவே, இந்த இடத்தை கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, எவ்வித பாரபட்சமின்றி கால்வாய் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நான் அந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. மாநகராட்சி இடத்தில் கால்வாய் கட்டுகிறோம். ஆக்கிரமிப்புகளை அவர்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நேரில் சென்று பார்த்துவிட்டு பேசுகிறேன்' என்றார்.