உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழில் நகரில் வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் தொட்டி

எழில் நகரில் வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் தொட்டி

எழில் நகர்: எழில் நகர் வாரிய குடியிருப்பில் உள்ள, 6,000 வீடுகளுக்கும், தனித்தனியாக குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, எழில் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 2012 - 13ல், மூன்றடுக்கு கொண்ட 6,000 வீடுகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் முறையாக கட்டப்படவில்லை என, ஒப்பந்த நிறுவனம் மீது புகார் உள்ளது. கட்டடம் கட்டி இரண்டே ஆண்டுகளில், மேல் பூச்சு, பக்கவாட்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதன்பின், அடிக்கடி சீரமைக்கப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் 6,000 குடியிருப்புகளையும் சீரமைக்க, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மொட்டை மாடியில் தரைஓடு, கழிப்பறையில் டைல்ஸ் பதிக்கப்படும். வெளிப்புற சுவர் பூச்சு, சேதமடைந்த குடிநீர், கழிவுநீர் குழாய் மாற்றுவது, வளாகத்தை சுற்றி சிமென்ட் கல் பதிப்பு, வண்ணம் பூச்சு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. தற்போது, இரண்டு வீட்டுக்கு, 500 லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி உள்ளது. வீடுகளில் சீராக குடிநீர் கிடைக்காததால், ஒவ்வொரு வீட்டுக்கும், 300 லிட்டர் கொள்ளளவில் தொட்டி அமைக்கப்படும். பிளாக்கில் உள்ள, 260 மின் பகிர்மான பெட்டிகள் புதுப்பிக்கப்படும். விரைந்து முடிக்க, 10 ஒப்பந்த நிறுவனங்களிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. மொத்த பணியும், மூன்று மாதங்களில் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !