பள்ளி வளாகத்தில் மழைநீர் நெசப்பாக்கத்தில் கடும் பாதிப்பு
நெசப்பாக்கம்:நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதுடன், கணேசன் நகரிலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்ததால், பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவில், சென்னை மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் ‛பெஞ்சல்' புயல் தாக்கத்தால் பெய்த மழையில், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. நேற்று மழை விட்ட நிலையிலும் மழைநீர் வடியாததால், மின் மோட்டார் வாயிலாக, பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர், ஏரிக்கரை சாலையில் விடப்பட்டது. அதேபோல், இப்பள்ளி அருகே உள்ள நெசப்பாக்கம் ராஜிவ்காந்தி நகர், கணேசன் தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது. இதனால், அவர்கள் வீட்டை காலி செய்து, மாற்று இடங்களுக்குச் சென்றனர். இத்தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, கழிவுநீர் ஏரிக்கரை சாலையில் விடப்பட்டது. இதனால், நெசப்பாக்கம் ஏரிக்கரை தெரு மற்றும் ராமாபுரம் பிரதான சாலை சந்திப்பில், குளம் போல் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது.
வடிகால் இல்லை
ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி, விடுகளில் புகுந்து விடுகிறது. மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால், மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இத்தெருவில் மழைநீர் வடிகால் இல்லை. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஏ.சேகர், 32,கணேசன் தெரு, நெசப்பாக்கம்.