1 கி.மீ., ஆறாக ஓடிய கழிவுநீர் ஆவடி சாலையில் தடுமாற்றம்
ஆவடி, ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜெ.பி., எஸ்டேட் அருகே, நேற்று காலை 9:30 மணிக்கு பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், ஜெ.பி., எஸ்டேட் முதல் வசந்தம் நகர் வரை 1 கி.மீ., துாரம் ஓடிய கழிவுநீரால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கழிவுநீரில் இருந்து வெளியான துர்நாற்றத்தால், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு, குமட்டல் ஏற்பட்டது. பலரும் மூக்கை பிடித்தபடி சாலையை கடந்து சென்றனர். தகவலறிந்து வந்த ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை உடைப்பை தற்காலிகமாக சரி செய்தனர்.ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மின்சார கேபிள் புதைக்கும் பணிக்காக, நேற்று முன்தினம் இரவு பள்ளம் தோண்டியபோது, பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது தெரிந்தது.