ஜாம்பஜார் சந்தையில் வழிந்தோடும் கழிவுநீர்
சென்னை, ஜாம்பஜார் சந்தை அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், பாதசாரிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் சந்தை அருகே பாரதி சாலையில் கடந்த, 10 நாட்களாக கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பாதசாரிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கொசு தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கழிவுநீர் சாலையில் ஓடுவது குறித்து, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். 'கழிவுநீர் அடைப்பு என்றால் நாங்கள் சரி செய்வோம். மழைநீர் வடிகால்வாய் பணி நடப்பதால், ஊழியர்கள் கழிவுநீரை சாலையில் விட்டு வருகின்றனர். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என, அதிகாரிகள் கூறிவிட்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் இது பற்றி கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சந்தையில் காய்கறி, பழங்கள் மற்றும் இறைச்சி வாங்க வரும் மக்கள், கழிவுநீரிலேயே நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ***