சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே ஏரியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் செம்பாக்கத்தில் அதிர்ச்சி
அஸ்தினாபுரம்: அஸ்தினாபுரத்தில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பாதாள சாக்கடை கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே செம்பாக்கம் ஏரியில் கலக்கின்றனர். தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே இயந்திர நுழைவாயில் வழியாக வெளியேறி, சாலைகளில் வழிந்தோடி தேங்குகிறது. இதை சரிசெய்யாமல், மோட்டார் மூலம் இறைத்து, கால்வாயில் கலக்கின்றனர். இந்த நிலையில், திரு.வி.க., நகர், வினோபாஜி நகர், வெங்கட்ராமன் நகர், அரிதாஸ்புரம், எம்.சி., நகர், சரஸ்வதி நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு, திரு.வி.க., நகர் சுடுகாட்டை ஒட்டி கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் நிரம்பியவுடன், ஒரு பகுதியை உடைத்து, அருகே செல்லும் மழைநீர் கால்வாய் வழியாக அப்படியே செம்பாக்கம் ஏரியில் கலக்கின்றனர். பொதுமக்கள் யாராவது பார்த்து, இதுகுறித்து கேட்டால் நிறுத்தி விடுகின்றனர். யாரும் பார்க்கவில்லை எனில், மொத்தத்தையும் ஏரியில் கலக்கின்றனர். ஏற்கனவே, கழிவுநீர் கலந்து நாசமாகிவிட்ட செம்பாக்கம் ஏரியில், பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே கலப்பது வேதனை அளிக்கிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே, இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்றும், அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.