மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் இருந்த காலணி பாதுகாப்பு அறைகள் அகற்றப்பட்டதால், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் காலணிகள் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.சென்னை, கபாலீஸ்வரர் கோவிலில் கிழக்கு, மேற்கு கோபுர வாசலில், நான்கு காலணி பாதுகாப்பு அறைகள் இருந்தன. தனியார் பராமரிப்பில் இருந்த இது, இரண்டாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், மேற்கு கோபுர வாசலில் இருந்த காலணி பாதுகாப்பு அறை, சமீபத்தில் அகற்றப்பட்டது. அங்கு, மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில்,'பேட்டரி' கார் திட்டத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.தற்போது, கோவிலின் முகப்பில் ஒரு காலணி பாதுகாப்பு அறை மட்டுமே செயல்படுகிறது.கபாலீஸ்வரர் கோவிலில் வார விடுமுறை நாட்கள், பிரதோஷம், பண்டிகை, திருவிழா, விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். அவர்களுக்கு, போதிய காலணி பாதுகாப்பு அறை இல்லை.இதனால், கோவில் முகப்பில் காலணிகளை விட்டுச் செல்கின்றனர். அவற்றில் பல திருடு போவதாக, பக்தர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.இதை தவிர்க்க, உரிய காலணி பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், கோவிலில் பூனை தொல்லை அதிகரித்து வருகிறது. பூனைகளுக்கு உணவாக, கோவிலைச் சுற்றி கடை நடத்தும் சிலர்,'பெடிகிரி' எனும் அசைவ உணவுப் பொருள் கொடுக்கின்றனர்.கோபுர வாசல் பகுதியில் இந்த உணவுப் பொருளை பூனைக்கு வைப்பதால், அதை மிதித்து கோவிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.இதை தடுக்கும் வகையில், நுழைவாயிலில் திருப்பதி கோவிலில் உள்ளது போல், கால் நனைக்கும் குழாய் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.