தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்
சென்னை,சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற் சாலைகளில், தமிழில் பெயர் பலகைகள் வைப்பது தொடர்பாக வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அ.ராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டம் குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் வாயிலாக, தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாதம் தோறும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே போல உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படாவிட்டால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டத்தின்படி, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.