மெரினாவில் வெட்டி அகற்றப்படும் மரங்கள் சி.எம்.டி.ஏ., மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
சென்னை, மெரினாவில் பாரம்பரிய வழித்தடம் அமைக்கும் பணிக்காக, பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மரங்களை சி.எம்.டி.ஏ., வெட்டி வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை, 'மெரினா பாரம்பரிய வழித்தடம்' எனு ம் திட்டம், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக நடைபாதை அமைக்கும் பணியை துவங்கிய சி.எம்.டி.ஏ., மெரினா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை காரணம் காட்டி, மரங்களை வெட்டக்கூடாது என்றும் அப்படியே வெட்டினால் அதற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மே லும் மரங்களை வெட்டுவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டார துணை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சி.எம்.டி.ஏ.,வின் ஒப்பந்ததாரர்கள் இந்த நடைமுறையை ஏதும் பின்பற்றாமல் மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். எனவே மரங்களை வெட்டாமல் பாரம்பரிய நடைபாதையை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.