சென்னை: ''ஆயிரம்விளக்கு உட்பட ஆறு இடங்களில் கடும் பாறைகள் இருப்பதால், மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் சவாலாக உள்ளன,'' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்தார். சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் -- சிப்காட் வரை 45 கி.மீ; கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் 26 கி.மீ; மாதவரம் - சோழிங்கநல்லுார் 47 கி.மீ; மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில், மொத்தமுள்ள 118 கி.மீ., துாரத்தில், 43 கி.மீ., துாரம் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 19,080 டன் பாறை மாதவரம் - ராயப்பேட்டை; ராயப்பேட்டை - திருவான்மியூர், நாதமுனி, கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாறைகள் நிலவுகின்றன. இதனால், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் சவாலாக இருக்கின்றன. குறிப்பாக, ஆயிரம்விளக்கு பகுதியில், ஆர்.வி.என்.எல்., மற்றும் யூ.ஆர்.சி., நிறுவனங்கள் சார்பில், 2வது மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பகுதியில், கடுமையான பாறைகள் இருக்கின்றன. இதுவரை 19,080 டன் பாறைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரும்பாலும், மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைகின்றன. இருப்பினும், தவிர்க்க முடியாத பகுதிகளில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில், சில பகுதிகளில் பூமியை தோண்டிய அடுத்த சில அடிகளிலேயே, பாறைகள் காணப்படுகின்றன. 124 அடி ஆழம் இது, சவாலான பணியாக இருக்கிறது. குறிப்பாக, ஆயிரம் விளக்கு, தரமணி, திருவான்மியூர், மயிலாப்பூர், ஜெமினி, இந்திராநகர் ஆகிய இடங்களில் அடர்ந்த பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளை அடையாளம் கண்டு, ராட்சத இயந்திரங்களை கொண்டு படிப்படியாக அகற்றி மெட்ரோ ரயில் பாதையும், மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைத்து வருகிறோம். ஆயிரம் விளக்கில் அமையும் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம், பூமியில் இருந்து 124 அடிகளின் கீழ் அமைகிறது. 30 அடிக்கு கீழ் கடுமையான பாறைகள் இருக்கின்றன. தற்போது, அப்பாறைகளை அகற்றும் பணி நடக்கிறது. பாதிப்பில்லை ரயில் நிலையம் அமைக்க எடுத்துள்ள புவி வரைப்படித்தின்படி, 1.45 லட்சம் டன் பாறைகள் எடுக்க வேண்டி உள்ளது. ஒவ்வொன்றும் ஒன்று முதல் இரண்டு டன் பாறைகளாக வெட்டி சிறிது சிறிதாக வெளியே எடுத்து வருகிறோம். இதுவரை, 19,080 டன் பாறைகள் மட்டுமே எடுத்துள்ளோம். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், 400க்கும் மேற்பட்ட பம்ப் மோட்டார்கள் போட்டு, மழைநீர் தேங்குவதை உடனுக்குடன் அகற்றி வருகிறோம். இதனால், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்தாண்டு டிசம்பருக்கு பின், சுரங்கப்பாதையில் பணிகள் படிப்படியாக முடியும். 2028 ஜூனில் அனைத்து பணிகளும் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.