செல்வ மகள் சேமிப்பு திட்டம் கணக்கு துவங்க சிறப்பு மேளா
சென்னைசெல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான சிறப்பு மேளாவை, வரும், 21, 28, மார்ச் 10 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்படும் என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.அஞ்சல் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை, 2015ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக, பெற்றோர், பாதுகாவலர் கணக்கு துவங்கலாம். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். இதற்கு, 8.2 சதவீத வட்டி கிடைக்கும்.கணக்கு துவங்கி, 21 ஆண்டுகள் முடிவில், முதிர்ச்சி தொகை கிடைக்கும். அதற்கு முன், உயர்கல்விக்காக, 10ம் வகுப்பு முடித்து அல்லது 18 வயது கடந்தால், 50 சதவீத தொகையை எடுக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், வேலுார், திருவண்ணாமலை, புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இதுவரை, 10 லட்சம் கணக்குகள் கடந்து, 8,351 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச், 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில், முக்கிய அலுவலகங்களில், சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். வாடிக்கையாளர்கள்இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.