மாற்றுத்திறனாளிகள் திறமை அறியும் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
சென்னை,மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கவும், அவர்கள் திறமையை கண்டறியவும், சென்னை ஐ.ஐ.டி.,யின் உதவி சுகாதார தொழில் நுட்ப தேசிய மையம், மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டு மையம், ஆர்.ஆர்.டி என்ற தனியார் நிறுவனம் ஆகியவவை சார்பில், 'திறமை - அனைவருக்கும் விளையாட்டு' என்ற தலைப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. நாளை வரை நடக்கும், இப்போட்டியில், 100க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.துவக்க விழாவில் பங்கேற்ற, மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் பேசுகையில், ''ஒவ்வொரு தனி நபருக்கும், தனித்துவமான திறமைகள் உண்டு. அதில் கவனம் செலுத்த வேண்டும். ''அதிக பயிற்சி மற்றும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், வாழ்வில் அதிக மேடைகளை காண முடியும். உங்களை ஊக்குவிக்க, உங்களோடு ஒரு நபர் இருந்துகொண்டே இருப்பார். அது பயிற்சியாளராகவோ; இல்லை உறவினராகவோ இருக்கலாம்,'' என்றார்.சென்னை ஐ.ஐ.டி., டீன் சத்யநாராயணன் என்.கும்மாடி கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு உபகரணங்கள், சக்கர நாற்காலிகள் போன்றவற்றை உருவாக்கவும், தற்போதுள்ளவற்றில் மாற்றங்கள் செய்யவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ''வரும் காலங்களில் அரசுடன் சேர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்க விரும்புகிறோம்,'' என்றார்.