உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கல்வி மாவட்ட தடகளம் 1,000 மாணவர்கள் உற்சாகம்

பள்ளிக்கல்வி மாவட்ட தடகளம் 1,000 மாணவர்கள் உற்சாகம்

சென்னை, பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், சென்னையில் பல இடங்களில் நடந்து வருகின்றன. அதன்படி, மண்ணிவாக்கம் அரசு பள்ளி ஆதரவில், செங்கல்பட்டு மாவட்ட தடகளப் போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கின. போட்டியில், மாவட்டத்திற்கு உட்பட பல பள்ளிகளைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், 50, 100, 200 மீ., ஓட்டம் முதல், வட்டு, ஈட்டி, குண்டு ஏறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், உற்சாகமாக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில், ஒன்பது, 10ம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பிரிவுகளுக்கான போட்டியை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வி அலுவலர் மகாலட்சுமி, துவங்கி வைத்தார். மண்ணிவாக்கம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீலா, உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சங்கர், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டுத்துறை இயக்குனர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதில், மாணவியரில் 14 வயதுக்கு உட்பட 4*100 'ரிலே' பிரிவில், கீழ்க்கட்டளை, ஹோலி பேமிலி கான்வென்ட் பள்ளி மாணவியர் முதலிடத்தை பிடித்தனர். அதேபோல், 17 வயது பிரிவில், மறைமலை நகர், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி முதலிடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !