விளையாட்டு செய்தி - ப்ளூ ஸ்கை கிரிக்கெட்: சி.எம்.ஆர்., வெற்றி
சென்னை:சென்னையில், நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பேட்டிங்கில் களக்கிய சி.எம்.ஆர்., அணி நம்பிக்கையுடன் பந்துவீசி, அசத்தல் வெற்றி பெற்றது.சென்னையில் இயங்கிவரும் ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல இடங்களில் நடந்து வருகின்றன. ஒன்பது அணிகள் பங்கேற்று, விளையாடி வருகின்றன.ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றி பெறும் நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.அதன்படி நேற்று, முகப்பேர், கிரிகோரியஸ் பள்ளி மைதானத்தில் நடந்த 'லீக்' போட்டியில், சி.எம்.ஆர்., அணியை எதிர்த்து, குமார் கிரிக்கெட் குழு பலப்பரீட்சை நடத்தியது.முதலில் களமிறங்கிய சி.எம்.ஆர்., அணி வீரர்கள், பந்துகளை தெறிக்கவிட்டு, ரன் வேட்டையில் ஈடுபட்டனர்.விக்னேஷ் 31 பந்தில் 72 ரன்கள், பிரதீப் 17 பந்துகளில் 54 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை சி.எம்.ஆர்., அணி குவித்தது.சவாலான இலக்குடன் களமிறங்கிய குமார் கிரிக்கெட் அணிக்கு அவைக்கரசன், ராகேஷ் முறையே 47, 40 ரன்களை எடுத்து நம்பிக்கை அளித்தனர்.ஆனால், எதிரணியின் நேர்த்தியான பந்து வீச்சு, துடிப்பான பீல்டிங் போன்றவற்றால், குமார் அணியால் எட்டு விக்கெட் இழப்பிற்கு 198 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சி.எம்.ஆர்., அணி, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.