ஆசிய ஓபன் செஸ் தொடர் எஸ்.ஆர்.எம்., வீரர் சாம்பியன்
சென்னை:பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய ஓபன் செஸ் தொடரில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ராகுல், சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். உலக செஸ் சங்கம் சார்பில், ஆடவருக்கான 6வது தனிநபர் ஆசிய ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓசாமிஸ் நகரில், கடந்த 2ம் தேதி துவங்கி நடந்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த சென்னையின் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் ராகுல், 21, போட்டியிட்டார். தனிநபர் சுற்றின் இறுதி கட்டப் போட்டிகள் நேற்று நடந்தன. ஒரு சுற்று மீதமிருந்த நிலையிலேயே, ராகுல் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மேலும் இவர், இந்தியாவின் 91வது கிராண்ட் மாஸ்டர்; தமிழகத்தின் 36வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் 15வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு, 2,400 புள்ளிகளைப் பெற்ற ராகுல், சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை பெற்றிருந்தார்.