பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்
சென்னை - பள்ளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி இறுதிப்போட்டியில் கொளப்பாக்கம், ஹார்ட்புல்னெஸ் அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் நடந்தன. அதன் இறுதிப்போட்டி, சென்னை சந்தோஷபுரத்தில் உள்ள சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொளப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் பள்ளி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற செயின்ட் பீட்ஸ் அணி பள்ளி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த ஹார்ட்புல்னெஸ் பள்ளி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மரன் வித்லானி, 1, ருத்விக் முரளிதரன், 8, ஹர்ஷத், 1, உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்த முகமது அயன், 26, பிரித்வின் பிரேம், 38 ரன்கள் எடுத்து, அணிக்கு சற்று ஆறுதல் தந்தனர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய செயின்ட் பீட்ஸ் அணிக்கு, துவக்க வீரராக வந்த ஜதன் ஜோனா டேவிட் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்து, வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி, 41.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.