முகப்பேரில் மாநில செஸ் போட்டி: திருவள்ளூர் சிறுவர்கள் அசத்தல்
சென்னை, முகப்பேரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில், திருவள்ளூர் மாவட்ட சிறுவர் - சிறுமியர் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.'ஏ - மேக்ஸ்' அகாடமி சார்பில், 5வது மாநில அளவிலான செஸ் போட்டி, முகப்பேரில் உள்ள டெக்லத்தான் மைதானத்தில், கடந்த 30ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்தது. 'பெஞ்சல்' புயல் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி, நேற்று முன்தினம் அதே இடத்தில் நடந்தது.இதில், 8, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஏழு சுற்றுகள் நடந்தன.போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலம் முழுதும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 720 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.எட்டு வயது பிரிவில், திருவள்ளூரை சேர்ந்த கிரீத்திக், சிறுமியரில் திருவள்ளூரை சேர்ந்த ஆத்யா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். 10 வயது பிரிவில், சிறுவரில் சென்னை சம்ருத், சிறுமியரில் திருவள்ளூர் மைத்ரேயி ஆகியோரும், 12 வயது பிரிவில், செங்கல்பட்டு அனிருத் மற்றும் சென்னை வருனவி ஆகியோரும் முதலிடங்களை கைப்பற்றி அசத்தினர்.அதேபோல், 15 வயது சிறுவரில், திருவள்ளூரை சேர்ந்த கார்த்திகேசவா முதலிடத்தையும், அதே மாவட்டத்தை சேர்ந்த தனிஷ் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.சிறுமியரில், சென்னையை சேர்ந்த அதிதி முதலிடத்தை வென்றார். சென்னையை சேர்ந்த தருண் மற்றும் திருவள்ளூர் ஐஸ்வரிய லட்சுமி ஆகிய இருவரும், 25 வயது பிரிவில் முதலிடங்களை தட்டிச் சென்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. அத்துடன், 'லக்கிடிரா' வாயிலாக, திருவள்ளூரை சேர்ந்த பிரதியுஷாவுக்கு, சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.