3 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்
நெற்குன்றம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை, தெரு நாய் கடித்து குதறியது. வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டு ஜெயராம் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர்கள் பிரபு -- மீனா தம்பதி. இவர்களது மகன் முகேஷ், 3. சிறுவன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்து தெருநாய் ஒன்று, சிறுவனை கடித்துக் குதறியது. இதில் சிறுவனின் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின், பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.