கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் துரத்தி கடிக்கும் தெருநாய்களால் பீதி
கீழ்ப்பாக்கம்,:கீழ்ப்பாக்கம், லோட்டஸ் காலனியில், பழமையான போலீஸ் குடியிருப்பில், மொத்தம் 15 'பிளாக்'கில், 150க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் உட்பட பலரும், தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பில், தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்-து வருகிறது. குறிப்பாக, ஒரு சிலர் அப்பகுதியில் உள்ள நாய்களை பராமரிப்பதால், குடியிருப்பில் வசிப்போர் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.இதுகுறித்து, குடியிருப்பில் வசிப்போர் கூறியதாவது:போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மக்களை, 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. இங்கு சுற்றி திரியும் நாய்கள், விளையாடும் குழந்தைகளை துரத்துகின்றன. சிலரை கடித்து, காயமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை, தெரு நாய்கள் விரட்டிக் கடிக்கின்றன.இரவு நேரங்களில் சுற்று நாய்களால், வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது. குறிப்பாக, இரவில் சீருடையில் வரும் போலீஸ்காரர்களை இந்த தெரு நாய்கள் துரத்துகின்றன.இங்கு குடியிருக்கும், சூளைமேடு காவல் நிலைய எஸ்.ஐ., ஸ்ரீராம் என்பவர், குடியிருப்பில் திரியும் நாய்களை பராமரிக்கிறார். இதனால், அடிக்கடி குடியிருப்பில் தகராறு ஏற்படுகிறது. நாய்களை பிடிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களை, இவர் அதிகார தோரணையில் மிரட்டுகிறார். தெரு நாய்களுக்கு 'பெல்ட்' அணிவித்துள்ளதால், நாய் பிடிப்பவர்களும் விட்டுவிடுகின்றனர்.உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து, குடியிருப்பில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.