வியாசர்பாடி மீன் சந்தைக்கு மாற்று இடம் மண்டல கூட்டத்தில் வலுத்த கோரிக்கை
தண்டையார்பேட்டை 'வியாசர்பாடி மீன் சந்தைக்கு மாற்று இடம் ஏற்படுத்தி தரவேண்டும்' என, தண்டையார்பேட்டை மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். தண்டையார்பேட்டை மண்டல மாதாந்திர கூட்டம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மண்டல அதிகாரி ராஜ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., - மார்க்சிஸ்ட் - வி.சி., கட்சி கவுன்சிலர்கள், சுகாதார அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் ஊழியர்கள் குடியிருப்பு மறு சீரமைப்பு செய்து நவீனமயமாக்க 2.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது வெட்டப்பட்ட சாலைகளை சீரமைக்க, 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட 17.66 கோடி ரூபாய் மதிப்பிலான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் மற்றும் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: சர்மிளா காந்தி, தி.மு.க., 34வது வார்டு: கொடுங்கையூர், ஆர்.வி.நகரில் பயன்பாட்டின்றி, அபாயகரமாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும். 34வது வார்டில், துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதை நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை சேகரிக்க, 10க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் தேவை உள்ளது. அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேணுகா, இ.கம்யூ., 44வது வார்டு: தண்டையார்பேட்டை, இளைய முதலி தெருவில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் குழாய் உடைந்து அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள திலகர் நகர் குடியிருப்பிலும் கழிவுநீர் தேங்கி, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து கழிவுநீர் குழாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டையார்பேட்டை, கைலாசம் தெருவில் உள்ள கழிப்பறையில், குழாய் பழுதால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்பஜெயதாஸ், தி.மு.க., 44வது வார்டு: எங்கள் வார்டில் தரையோடு தரையாக உள்ள 20க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்களை, 3 அடி உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமான நிலையில் உள்ள பில்லர் பாக்ஸ் கதவுகள் மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெரம்பூர், பழனியாண்டவர் கோவில் தெருவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், குடிநீர், கழிவு நீர் குழாய் மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. அருகில் பள்ளி உள்ளதால் மாணவர்கள் பாதிக்குள்ளாகின்றனர். எனவே, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். கோபிநாத், வி.சி., 45வது வார்டு: வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் குடியிருப்புகள் நடுவே தெருவை ஆக்கிரமித்து நடத்தப்படும் மீன் சந்தையால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதை அகற்ற 45 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், மீன் சந்தை மாற்றுவதற்கு, வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 16வது தெருவில் ஒதுக்கப்பட்ட இடம், பொதுப்பணி துறைக்கு சொந்தமானது என்பதால், அதில் தற்காலிக கடைகளை மட்டுமே அமைக்க முடியும். நிரந்தர கட்டடம் கட்ட முடியாது. எனவே, அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பயன்பாட்டிற்கு உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அங்கு மீன்சந்தை அமைக்கலாம். இதன் மூலம், 45 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதேபோல், 45வது வார்டுக்குட்பட்ட பி.வி.காலனி, சஞ்சய் நகர், சாஸ்திரி நகர் மக்கள் பயன்பெறும் வகையில், சஞ்சய் நகரில், ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் வைத்த மேற்கண்ட பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.