உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூட் தல சண்டையில் காயமடைந்த மாணவர்...உயிரிழப்பு மோதலை தடுக்க இரு கல்லுாரிகளுக்கு விடுமுறை

ரூட் தல சண்டையில் காயமடைந்த மாணவர்...உயிரிழப்பு மோதலை தடுக்க இரு கல்லுாரிகளுக்கு விடுமுறை

சென்னை : 'ரூட் தல' விவகாரத்தில் நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாநிலக் கல்லுாரி மாணவர் சுந்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களுக்குள் மோதல் ஏற்படுவதை தடுக்க, இரு கல்லுாரிகளுக்கும், ஆறு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில், 'ரூட் தல' என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் இடையிலும், இரு வேறு கல்லுாரி மாணவர்கள் இடையிலும் இப்பிரச்னை அவ்வப்போது எழுந்து வருகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தங்களை தலைவராக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் அணியில் மற்ற மாணவர்களை சேர்த்து கொண்டு வலம் வருவதும், எதிர் கோஷ்டியினர் மீது தாக்குதல் நடத்துவும் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும், மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களை எச்சரிப்பதோடு, பிரச்னை முடிவுக்கு வரும். தற்போது, முதல் முறையாக கொலை வரை இப்பிரச்னை சென்றுள்ளது. பெரும்பாலும், எதிர்கோஷ்டியினர் மீது தாக்குதல் நடப்பது வழக்கம் என்ற நிலையில், வேறொரு கல்லுாரியின் அடையாள அட்டையை அணிந்து வந்தார் என்பதற்காவே தாக்குதல் நடத்தியது, போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த பிரச்னையிலும் தொடர்பு இல்லாத மாணவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்பாடியைச் சேர்ந்தவர் சுந்தர், 19. மாநிலக் கல்லுாரியில், அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 4ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.அப்போது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், அவரை வழிமறித்து, 'ஏன் கல்லுாரி அடையாள அட்டையை அணிந்து வருகிறாய்' என கேட்டு, சுந்தரை சரமாரியாக தாக்கி தப்பினர்.இதில் படுகாயமடைந்த சுந்தரை, ரயில்வே போலீசார் மீட்டு, ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.

விடுமுறை

திருமுல்லைவாயலைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவன் ஈஸ்வர், 20, திருவள்ளூர் ஹரிபிரசாத், 20, கமலேஷ்வரன், 20, யுவராஜ், 20, ஆல்பர்ட், 20, ஆகிய ஐந்து பேர், தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கில், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தங்களை பெரிய ஆட்கள் என காட்டிக்கொள்வதற்காக, கொலை வெறி தாக்குதலில் மாணவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.சுந்தர் உயிரிழந்ததை அடுத்து, இரு கல்லுாரி நிர்வாகிகள், போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். இரு கல்லுாரி மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம்; மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், நேற்று முதல் ஆறு நாட்கள், விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, கல்லுாரிக்கு வந்த மாணவர்கள், வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இருப்பினும், மாநிலக் கல்லுாரி வளாகத்தில் சில மாணவர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடையாள அட்டை

அவர்கள், 'மாணவர்கள் சுந்தர் உயிரிழப்பிற்கு, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 15 பேர் காரணம். இதுவரை, ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன், கல்லுாரி நிர்வாகமும், போலீசாரும் சமரச பேச்சு நடத்தினர்.நேற்று மதியம் சுந்தரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின், போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான பொன்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு, அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி., ஹரிகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சென்னை மாநில கல்லுாரியில் இருந்து, 200க்கும் அதிகமான மாணவர்கள், மின்சார ரயில் வாயிலாக, திருத்தணிக்கு வந்தனர். அவர்களை போலீசார், அரசு பேருந்துகள் வாயிலாக, பொன்பாடிக்கு அழைத்து வந்தனர். இரவு 7:00 மணிக்கு மாணவன் சுந்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.உயிரிழந்த மாணவரின் சகோதரி தமிழ்ச்செல்வி கூறியதாவது:கல்லுாரிக்கு சேர்ந்து சில வாரங்களே ஆன நிலையில், சுந்தரை அடித்துக் கொன்றுவிட்டனர். கல்லுாரி மாணவர் என்பதற்கு அடையாள அட்டை தான் முக்கியம்.அடையாள அட்டை அணிந்து சென்றதை குற்றம் என்பதைபோல, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் என் சகோதரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டனர். சகோதரன் உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.'ரூட் தல' பிரச்னையில் தான் முதலில் ரவுடிசம் துவங்குகிறது. பிற்காலத்தில் கூலிக்கு கொலை செய்வோராகவும் மாறிவிடுவர். அதற்கு அச்சாணிதான் இந்த சம்பவம். இப்படிப்பட்ட மாணவர்கள், சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். கொலை செய்யும் அளவிற்கு செல்லும் மாணவர்கள் மீது, கருணையே காட்டக்கூடாது. இப்படிப்பட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் என யாருக்கும் அடங்கமாட்டார்கள். அவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.- கே.செல்வகுமாரசாமி, 65,உயர் நீதிமன்ற கிரிமினல் வழக்கறிஞர்,மாணவர்களின் மோதலின் போது, அங்கு இருந்தவர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை; காவல் துறையினரும் வரவில்லை. அப்போது யாராவது தடுத்திருந்தால், என் சகோதரன் உயிரிழந்திருக்க மாட்டான். இதற்கு காரணமான, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.- மகேந்திரன், உயிரிழந்த மாணவரின் சகோதரர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
அக் 10, 2024 08:35

முகத்தில் படிக்கிற மாணவன் களையே தெரியலியே...


nagendhiran
அக் 10, 2024 06:39

சிறு பிரச்சனை என்று பார்க்காமல் விடியல் காவல்துறை வழக்கு பதிந்து இருந்தால் இந்த சிறு பிரச்சனை கொலை வழக்கு பிரச்சனையாக மாறாமல் இருந்திருக்கும்? இப்ப ஒரு மாணவன் உயிர்? மற்றும் ஐந்து மாணவர்கள் மீது கொலை வழக்கு வராமல் இருந்துஇருக்கும்? வாழ்க விடியல் போலிஸ்? வளர்க அவர்கள் தொண்டு?


sundararajan
அக் 10, 2024 06:29

இரண்டு கல்லூரிகளையும் சில வருடங்கள் இழுத்து மூடுங்கள் அல்லது குறைந்த பட்சம் மானிலக் கல்லூரியை தனியார் பொறியியல் கல்லூரியாக மாற்றி விடுங்கள். திராவிட கேவலங்களின் விளைவே இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை