வரவேற்பில் மாணவர்கள்: பள்ளிக்கு குட்டு தினமலர் நாளிதழை சுட்டிக்காட்டிய அமைச்சர்
வேளச்சேரி,சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாள் நேற்று நடந்தது. நிகழ்ச்சி, காலை 8:30 மணிக்கு நடந்ததால், மாணவ - மாணவியர் 7:30 மணிக்கே வரவழைக்கப்பட்டு இருந்தனர்.பின், என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சில மாணவியர், அமைச்சர் சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரை, மேளதாளம் அடித்து, பூங்கொத்து கொடுத்து மேடைக்கு அழைத்து வந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் கோபமடைந்து, பள்ளி நிர்வாகத்தை கடிந்து கொண்டார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:நான் மேயராக இருந்தபோது, இதே பள்ளியில் நடந்த விழாவின் போது, தலைமையாசிரியர், எங்களை வரவேற்க, குழந்தைகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்.போக்குவரத்து நெரிசலால் நான் வர காலதாமதமானதால், வெயிலில் இரண்டு, மூன்று மாணவியர் மயங்கி விழுந்தனர்.'மேயருக்காக காத்திருந்த குழந்தைகள், வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர்' என, மறுநாள் 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.செய்தியை பார்த்ததும், யார் வந்தாலும், அவர்களை வரவேற்க மாணவர்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.ஆட்சி மாற்றம் காரணமாக பழைய நிலை தொடர்ந்தது. படிக்கும் நேரத்தில் வரவேற்க பயன்படுத்துவதை, மாணவர்கள் விரும்ப மாட்டார்கள். பெற்றோரும் ஏற்க மாட்டார்கள்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.தொடர்ந்து, மேயர் பிரியாவை பார்த்து, 'இதுபோல் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவிடுங்கள்' என கூறினார்.இதில், துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.