திருவல்லிக்கேணி, ஓமந்துாரார் பேருந்து நிறுத்தத்தில், பாட்டில், கற்கள் வீசி தாக்கிக்கொண்ட புதுக் கல்லுாரி மற்றும் மாநிலக் கல்லுாரி மாணவர்களால், பயணியர் அலறியடித்து ஓட்டம் படித்தனர். திருவள்ளூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 20; சென்னை, மாநிலக் கல்லுாரி இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு மாணவர்.இவர், அதே கல்லுாரியில் பயிலும், கும்மிடிப்பூண்டி, தண்டலத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 18, சிவபதி, 20, உட்பட 11 மாணவர்களுடன் நேற்று, கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார்.வழக்கம்போல், திருவள்ளூரில் இருந்து மின்சார ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து '2ஏ' மாநகர பேருந்தில் பயணித்தனர்.ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனை நிறுத்தத்தில், அப்பேருந்து நின்றது. அங்கு, புதுக் கல்லுாரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் நின்றிருந்தனர்.மாநகர பேருந்தில் பயணித்த மாநிலக் கல்லுாரி மாணவர்களை பார்த்ததும் ஆவேசமடைந்த புதுக் கல்லுாரி மாணவர்கள், அங்கு கிடந்த கற்கள் மற்றும் பாட்டில்களை எடுத்து, அவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு மாநிலக் கல்லுாரி மாணவர்கள், பேருந்தில் இறங்கி வந்து, அவர்களை தாக்கியதாக தெரிகிறது.இந்த களேபரத்தில் பீதியடைந்த பயணியர் சிலர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.தகவலறிந்து, திருவல்லிக்கேணி போலீசார் வந்ததும், புதுக் கல்லுாரி மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.காயமடைந்த மாநிலக் கல்லுாரி மாணவர்கள் ராஜேஷ், மோகன்ராஜ், சிவபதி ஆகியோர், அருகில் உள்ள ஓமந்துாரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.கண்காணிப்பு கேமராவை வைத்து, தப்பிச்சென்ற புதுக் கல்லுாரி மாணவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில், 'ரூட் தல' பிரச்னையில் இந்த மோதல் நடந்ததாக தெரிகிறது.
மாநகர பேருந்து ஊழியர்களை
தாக்கிய சட்டக்கல்லுாரி மாணவர்ஆவடி பேருந்து நிலையத்தில், கோயம்பேடு செல்லும் தடம் எண்:77 மாநகர பேருந்து, நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டிருந்தது.நேரக்காப்பாளர் அறையில், நேரத்தை பதிவிட்ட பின், ஓட்டுனர் ஹரிஹர சுப்ரமணியன், 57, பேருந்தை இயக்கினார். நடத்துனர் மணி, 52, உடன் இருந்தார்.பேருந்தில், மதுரவாயலைச் சேர்ந்த சட்டக்கல்லுாரி மாணவர் கிஷோர்குமார், 22, என்பவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். நடத்துனர் மணி, டிக்கெட் எடுக்க கூறியபோது, 'நாங்கள் பயணிக்கவில்லை. இறங்கப்போகிறோம்' என, கிஷோர்குமார் கூறினார்.ஆனால், பேருந்தில் இருந்து இறங்காமல், மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதனால், நடத்துனருக்கும், மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.மாணவர் கிஷோர்குமார், தன் கையில் வைத்திருந்த இருசக்கர வாகன சாவியால், நடத்துனரின் முகத்தில் குத்தினார். தடுக்க வந்த ஓட்டுனரையும் தாக்கி, அங்கிருந்து மாணவர் தப்பி ஓடினார்.காயமடைந்த இருவரும், ஆவடி போலீசில் புகார் அளித்தனர். நேற்று காலை, மாணவர் கிஷோர்குமாரை பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.