உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரமிக்க வைக்கும் தத்ரூபமான கள்ளழகர் ஓவியம் அருங்காட்சியகத்தில் 11 நாள் கண்காட்சி துவக்கம்

பிரமிக்க வைக்கும் தத்ரூபமான கள்ளழகர் ஓவியம் அருங்காட்சியகத்தில் 11 நாள் கண்காட்சி துவக்கம்

சென்னை :கலை பண்பாட்டுத்துறை சார்பில், மாநில அளவிலான 11 நாள் ஓவிய சிற்பக் கண்காட்சி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியில் விதவிதமான ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன.கண்காட்சியை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். சிறந்த படைப்புகளை உருவாக்கிய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்வில், சென்னை மேயர் பிரியா, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு, இணை இயக்குநர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காட்சியில், கள்ளழகர் பவனி செல்லும் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்திருந்த, கோவை பீளமேடைச் சேர்ந்த ஓவியர் ஜீவன் வெ.சக்திவேல், 60 கூறியதாவது: கள்ளழகர் படத்தை வரைய வேண்டும் என்பது நீண்ட கால கனவு. இந்த படம் 7 அடி நீளம், 5 அடி அகலம் கொண்டது. சுற்றி உள்ள ப்ரேம் தேக்கு மரத்தில் செய்து, அதில் பெருமாளுடைய சின்னங்களை செதுக்கியுள்ளேன். எண்ணெய் வண்ண ஓவியமான இதை, கேன்வாசில் வரைந்துள்ளேன். இதை வரைந்து முடிக்க ஒரு ஆண்டு ஆனது. கள்ளழகர் சிலையில் உள்ள கோல்டு வண்ணத்தை பல அடுக்குகளாக கொடுக்க வேண்டும். அப்போது தான் ஓவியம் தத்ரூபமாக இருக்கும். அதேபோல், கள்ளழகர் உலா செல்லும்போது, மல்லிகை பூ கொடை, ஆஞ்சநேயர் கொடி, நாமம் இடப்பட்ட விசிறி ஆகியவையும் உடன் வரும். கள்ளழகரை சுமந்து செல்பவர்களுடைய முகபாவங்கள் என அனைத்தையும் தத்ரூபமாக வரைய வேண்டும் என பார்த்து பார்த்து வரைந்தேன். இதன் விலை, ஏழு லட்சம் ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.கண்காட்சி இம்மாதம், 20ம் தேதி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.அரசின் இந்த முயற்சியால், கலைக் கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ ஓவியர்கள், மூத்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.என்னதான் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், அதன் வாயிலாக ஓவியங்கள் வரையப்பட்டாலும், அதற்கான காப்புரிமை மனிதர்களிடமே உள்ளது. ஆகவே, அறிவுசார் சொத்துரிமை மனிதர்களுக்கு சொந்தமானது. அவற்றை வளப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் உதவுகிறது.- கு. கவிமணி,பதிப்போவதியத்துறை தலைவர்,அரசு கவின் கலை கல்லுாரி, சென்னை.

புது மணப்பெண் நான்தான்!

சென்னை கவின் கலை கல்லுாரி மாணவி கா.லாவண்யா ஜெகப்ரியன் கூறியதாவது: புதுமண பெண் புகுந்த வீட்டில் சமையல் செய்யும் படத்தை வரைந்துள்ளேன். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என, பெண்ணின் வாழ்க்கையை இரண்டாக பார்க்கலாம். பிறந்த வீட்டில் சமையல் அறை பக்கம்கூட செல்லாத ஒரு பெண், திருமணத்திற்கு பின், தன் கணவனுக்காக சமையல் அறையில், சமைப்பதை காட்சிப்படுத்த விரும்பினேன். அதனால், நெற்றி நிறைய குங்குமம், ஈரமான தாலியுடன், பட்டுப்புடவை உடுத்தி சமைக்கிறாள். அடுப்பறை சூட்டை புதிதாக உணவர்வதுபோல், ஆவியை கண்டு அஞ்சியவள் போல் வரைந்துள்ளேன். அந்தப் படத்தில் இருப்பது நான்தான். என் கணவர் புகைப்படம் எடுத்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை