புறநகர் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள் சென்னையுடன்...இணைப்பு!: 2025க்குள் 300ஆக உயர்கிறது மாநகராட்சி வார்டுகள்
சென்னை மாநகராட்சியுடன், புறநகரை சுற்றியுள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 2025ம் ஆண்டிற்குள், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்படுவதுடன், மாநகராட்சியின் வார்டுகள் 200ல் இருந்து, 300 ஆக உயரும் என, நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய, 10 மண்டலமாக செயல்பட்டது.நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரில் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதன்படி, நிர்வாக வசதிக்காக 200 வார்டுகள், 15 மண்டலங்களை உள்ளடக்கி தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 வட்டாரங்களாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.அதன்படி திருப்போரூர், சோழிங்கநல்லுார், மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே, துறை செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தெரிவிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்து உள்ளது. வார்டு விரிவாக்க பணி
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை மேம்படுத்தும் வகையில், அவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. அதன்படி சுற்றுலாத்தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் இருக்கும் பகுதிகள், முன்னுரிமை அடிப்படையில் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பின், மாநகராட்சியுடன் இணைக்கப்படும். அதேபோல், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பு பணியும், வார்டு விரிவாக்க பணியுடன் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதால், ஊரக வளர்ச்சித் துறைக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது. ஏற்கனவே, ஊரக பகுதிகளுக்கான மத்திய அரசு நிதி குறைவாகவே உள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கும்பட்சத்தில், அப்பகுதிகளின் சாலை கட்டமைப்பு, பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வளர்ச்சிகள் மேம்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ச்சியான பகுதி அவசியம்!
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது:நகரமைப்பு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி - 9ஏ, பிரிவு '243பி' கீழ் வருகிறது. அதன்படி, பெருநகர பகுதி அல்லது ஒரு நகராட்சி பகுதி, இதில் எதுவாகினும், அதற்குள் வரும் பகுதிகள் எவை என்பது கவர்னரின் பொதுவான அறிவிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட வேண்டும். அத்தகைய பகுதிகள் மட்டுமே, பெருநகர அல்லது நகராட்சி பகுதியாக இருக்கும். பெருநகர பகுதியை பொறுத்தவரை, தொடர்ச்சியான ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நடுவில் ஒரு பகுதியை விடக்கூடாது. அந்த வரிசையில் பார்க்கும் போது, சென்னை பெருநகரத்தில் விரிவாக்கத்தில் இணைக்கப்பட உள்ள பகுதிகள் எந்த அடிப்படையில் இணைக்கப்பட வேண்டும் என்பதை, அரசு அதன் கொள்கை முடிவாக எடுக்கலாம். அப்படி எடுக்கும் போது, அது தொடர்ச்சியான பகுதியாக இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்ச்சியான பகுதியாக இல்லை எனில், கவர்னரின் அறிவிப்பை ரத்து செய்ய, உயர் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வார்டு அதிகரிப்பு ஏன்?
சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகை, 1 கோடியை நெருங்கி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, தற்போது உள்ள வார்டுகள் விரிவாக்கம் செய்யப்படும். அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, அவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. அதன்படி, ஆறு வட்டாரங்களுடன் 26 மண்டலங்கள்; 300 வார்டுகளில் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -