அண்ணா நகரில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் திணறல்
அண்ணா நகர், அண்ணா நகர் ஆறாவது அவென்யூவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர், ஆறாவது அவென்யூ சாலையில், 15வது தெரு இணைப்பு பகுதியில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகில், நேற்று காலை திடீரென சாலை உள்வாங்கி, 3 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார், குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், பள்ளத்தைச் சுற்றி தடுப்பு அமைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆறாவது அவென்யூவில், மத்திய அரசு திட்டத்தில், தனியார் நிறுவனத்தால் காஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணியால் குடிநீர் அல்லது கழிவுநீர் குழாயில் சேதம் ஏற்பட்டு, மண் அரிப்பால் சாலை உள்வாங்கியது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட காஸ் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பள்ளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். திடீர் பள்ளத்தால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.