மேலும் செய்திகள்
சுந்தரமூர்த்தி சுவாமிக்கு குருபூஜை விழா
02-Aug-2025
திருவொற்றியூர்,சுந்தரமூர்த்தி நாயனார் திருநட்சத்திரத்தையொட்டி, விசேஷ அபிஷேகம் மற்றும் நான்கு மாடவீதி உலா விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட மூவர், பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலின் மைய மண்டபத்தில், 63 நாயன்மார்களுக்கு சிலைகள் உள்ளன. நாயன்மார்கள் பிறந்த திருநட்சத்திரத்தின்போது, விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த, ஆடி - சுவாதி திருநட்சத்திரம் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலையில் கோவில் வளாகத்தில், 63 நாயன்மார்களில் முதலாவதாக வீற்றிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு, உற்சவர் சுந்தரமூர்த்தி நாயனார் - சங்கிலி நாச்சியார், சிறப்பு மலர் அலங்காரத்தில், வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
02-Aug-2025