தி.நகர் மல்டி லெவல் பார்க்கிங்கில் கட்டணம் குறைக்குது மாநகராட்சி
தி.நகர், தி.நகர் மல்டி லெவல் பார்க்கிங் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், வாகன கட்டணத்தை குறைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை பாண்டி பஜார் பகுதியில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இங்கு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துக்கு தரப்பட்டு இருந்தது.இந்நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நேற்று, மல்டி லெவல் பார்க்கிங்கை ஆய்வு செய்தார்.பின், துணை மேயர் மகேஷ் குமார் கூறியதாவது :போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மல்டி லெவல் பார்க்கிங் உருவாக்கப்பட்டது. இங்கு, 512 இருசக்கர வாகனங்கள், 236 நான்கு சக்கர வாகனமும் நிறுத்தலாம்.பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் தளத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகள் எரியும் படி சீர் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்த பார்க்கிங், கடந்த ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடப்பட்டது. அந்த ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தம் முடிந்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. அதன் பின், புதிய ஒப்பந்தம் கோரப்படும். பார்க்கிங் பயன்பாட்டை அதிகரிக்க, கட்டணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளோம். மாத்திற்கு இரு முறை செயற் பொறியாளர்கள் பார்வையிட்டு, குறைகளை சரி செய்வார்.இந்த வாகன நிறுதத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில், பிராட்வே, அண்ணா நகர், பெசன்ட் நகர், மெரினா ஆகிய இடங்களில், மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.