வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
சென்னை, தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா, தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது.சென்னை, வடபழனி முருகன் கோவிலில் நட்சத்திரப்படி தைப்பூசம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது.பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு, நேற்று காலை அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று இரவு வெள்ளி மயில் வாகனத்தில், பழனி முருகன் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னையின் பிரசித்தி பெற்ற பிற கோவில்களான பாரிமுனை கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன், பாம்பன்சுவாமிகள், மயிலை கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், இன்று தைப்பூச விழா விமர்சையாக நடக்க உள்ளது.அதேபோல, புறநகரில் குரோம்பேட்டை, நேரு நகர், குமரன் குன்றம், வல்லக்கோட்டை, அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், குன்றத்துார் முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூசத் திருவிழா நடக்கிறது.