தாம்பரம் - செங்கல்பட்டு 4வது பாதை ரூ.757 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 757.18 கோடி ரூபாயிலான நான்கு வழிப்பாதை திட்டத்திற்கு, ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வழியே செல்கிறது. தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் மூன்று ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது. தற்போது, இந்த திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே, 30 கி.மீ., துாரம், 757.18 கோடி ரூபாயில், நான்காவது ரயில் பாதை அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்ல வகை செய்யப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், தாம்பரம் -- செங்கல்பட்டு பிரதான பாதை. மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் பயணியரின் பயன்பாடு, 87 சதவீதமாக உள்ளது. நான்காவது ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வரும்போது, 136 சதவீதமாக உயரும். பயணியர் நெரிசலும் குறையும். இது, மின்சார ரயில் சேவையை செங்கல்பட்டு வரையில் நீட்டிக்கவும் உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியருக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த வழித்தடத்தில் ஆண்டுக்கு, 157 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில், பொத்தேரியில் சரக்கு ரயில் போக்குவரத்தும் கையாளப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.