குடிநீர் தொட்டி அருகே நாய்கள் பாதுகாப்பு மையம் தாம்பரம் மக்கள் எதிர்ப்பு
தாம்பரம்: மேற்கு தாம்பரம் கடப்பேரியில், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகள் உள்ள இடத்தில், நாய்கள் பாதுகாப்பு மையம் அமைக்கும் மாநகராட்சியின் செயலுக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், திருநீர்மலை சாலை, கடப்பேரியில், மாநகராட்சி மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் பாலாறு குடிநீர் நிரப்பப்பட்டு, 39, 49, 50 ஆகிய மூன்று வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த தொட்டிகளை ஒட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், நாய்கள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, எதிர்ப்பு எழுந்ததால், அப்படியே விட்டு விட்டனர். இந்நிலையில், அதை புதுப்பித்து, மீண்டும் நாய்கள் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை, மாநகராட்சி துவக்கியுள்ளது. குடிநீர் தொட்டிகளுக்கு அருகே நாய்கள் மையம் அமைந்தால், குடிநீர் கெட்டுப்போவதற்கும், அதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நாய்கள் மையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு, குடிநீர் தொட்டிகளுக்குள் செல்ல வாய்ப்புள்ளது என்று, சுத்தமாக பராமரிக்க வேண்டிய இடம், அசுத்தமாக மாறிவிடும் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் தொட்டிகளுக்கு அருகே, நாய்கள் மையம் அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.