இந்திய கால்பந்து அணி முகாமில் இடம்பிடித்த தமிழக வீராங்கனையர்
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழக அணி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தின் பிரியதர்ஷினி மற்றும் சவுமியா, இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவில் '30வது மகளிர் சீனியர் ராஜமாதா ஜிஜாபாய் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்' போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தின், நாராயண்பூர் நகரில் நடந்தது. இதில் தமிழக அணி உட்பட மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டிக்கு தமிழகம், மணிப்பூர், மேற்கு வங்கம் மற்றும் உ.பி., அணிகள் தகுதி பெற்றன இறுதிப் போட்டியில், மணிப்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணி, மூன்றாவது இடத்தை பிடித்தது. தமிழக அணியில் சிறப்பாக விளையாடிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சவுமியா ஆகியோர், இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினால் இருவரும், இந்திய கால்பந்து அணியில் இடம்பெறுவர்.