பந்தல் அகற்றும்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் சீரியஸ்
எம்.கே.பி.நகர், பந்தல் அகற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து, வாலிபர் படுகாயமடைந்தார். எம்.கே.பி.நகர், 10வது மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த், 27. நிகழ்ச்சிகளில் சாமியானா என்கிற துணிப்பந்தல் போடும் பணி செய்து வருகிறார். எம்.கே.பி.நகர், 13வது கிழக்கு குறுக்கு தெருவில், நேற்று நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக பந்தல் போட்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்து, பந்தல் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அரவிந்தின் வலது கை, தவறுதலாக அருகில் இருந்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட அரவிந்த், கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.