கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? ஐகோர்ட் அதிரடி
சென்னை, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனியார் கட்டுமான நிறுவனம் ஆக்கிரமித்திருப்பதாகவும், அதை அகற்ற உத்தரவிடக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இம்மனு, நீதிபதிகள் எம்.சுந்தர், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, அறநிலையத் துறை சட்டம் வழிவகுக்கிறது. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப்பட்ட பின், மனுதாரர் தரப்பில் அளித்த மனுவை பரிசீலித்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஆக்கிரமித்ததாக கூறப்படும் நிறுவனத்துக்கு, சட்டப்படி சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். கோவில் நிலத்தை வேறு எவரும் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்கள் தரப்பில் பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்கி, சட்டப்படியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.