உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீபாவளி பயணம் புறநகரில் வசிப்போர் பரனுாரில் பஸ் ஏறி செல்ல தற்காலிக வசதி

தீபாவளி பயணம் புறநகரில் வசிப்போர் பரனுாரில் பஸ் ஏறி செல்ல தற்காலிக வசதி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் பகுதியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதன் வழியாக, அரசு மற்றும் தனியார் வாகனங்கள், தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.இந்நிலையில், அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, புறநகரில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர், சொந்த ஊருக்கு செல்வர்.அவர்கள் கிளாம்பாக்கம் வந்து பேருந்து ஏறி செல்ல சிரமப்படுவர் என்பதால், பயணியரின் வசதிக்காக, பரனுார் மற்றும் ஆத்துார் சுங்கச்சாவடிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், இந்நிறுத்தங்களில் நின்று செல்லும். அதனால், 'ட்ரோன்' கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிப்பு, குடிநீர், உயர் கோபுர மின் விளக்கு, தற்காலிக கழிப்பறைகள், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து, சுங்கச்சாவடி பகுதியில், பயணியருக்கு அடிப்படை வசதிகள் செய்யும் பணி துவங்கியுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், டி.எஸ்.பி., தலைமையில், 84 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதேபோல், ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், 64 போலீசார் ஈடுபடுவர்.இதுமட்டுமின்றி, பரனுார், புறவழிச்சாலை, மேம்பாலங்கள், மாமண்டூர் பாலம், சோத்துப்பாக்கம் மேம்பாலம், புக்கத்துறை, படாளம், மேலவலம்பேட்டை, கருங்குழி, அய்யனார் கோவில், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ