கிண்டியில் பல்நோக்கு வளாகம் சாத்தியக்கூறு ஆய்வுக்கு டெண்டர்
சென்னை :கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 'டெண்டர்' வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய சந்திப்பாக, கிண்டி உருவெடுத்துள்ளது. எனவே, தற்போதுள்ள கிண்டி பேருந்து நிலையம், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வணிக வளாகம், பிரமாண்ட நடைமேம்பாலம், நகரும்படிகள், வெளிப்புற நடைபாதைகள், இணைப்பு வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. தமிழக அரசின் உத்தரவின்பேரில், கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனம் வாயிலாக, இந்த அறிக்கை அடுத்த நான்கு மாதங்களில் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட திட்டப்பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.