டென்னிஸ் சென்னை வீராங்கனையர் அசத்தல்
சென்னை,மாநில டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு போட்டியில், சென்னை வீராங்கனையர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தினர். முதல்வர் கோப்பைக்கான மாநில பள்ளி மாணவியருக்கான டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட அணிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். இதன் ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னையின் ஜோஷிதா 1 வெற்றி, 2 தோல்வி என, மொத்தம் 2 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். இரட்டையர் பிரிவு போட்டியில், சென்னையின் லனிகா - எம்.எஸ்.தனுஸ்ரீ ஜோடி 6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம்; ஹீரா நிஹாரிகா - ஜோஷிதா ஜோடி, 4 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம்; ஜஸ்வந்தி - வசுதா எண்ணமுரி 2 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்று அசத்தினர்.