பஸ் ஓட்டுனருக்கு வலிப்பு மீடியனில் மோதி விபத்து
அயனாவரம்:வில்லிவாக்கம், ஜாயின்ட் ஆபீஸ் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50; மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர்.இவர், நேற்று காலை, புதுாரில் இருந்து மிண்ட் நோக்கி, தடம் எண்: 48பி, மாநகர பேருந்தை ஓட்டிச் சென்றார். மதியம் 12:00 மணிக்கு, அயனாவரம் குன்னுார் சாலையில் சென்ற போது, செந்தில்குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுனர், வலதுபுற சாலை தடுப்பில் மோதி பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். எனினும், அங்கிருந்த ஒரு ஆட்டோ சிறியளவு சேதம் ஏற்பட்டது. யாருக்கும் அடிபடவில்லை.பேருந்தில் இருந்து இறங்கிய பயணியர் மற்றும் நடத்தினர் மோசஸ் ஆகியோர், செந்தில்குமாரை மீட்டு, '108 ' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சம்பவ இடத்திற்கு சென்ற அயனாவரம் போலீசார், பேருந்தை சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.