உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லாங்குழியாக மாறிப்போன சாலைகள் ஒட்டுப்போடுவதை கைவிட்டது மாநகராட்சி

பல்லாங்குழியாக மாறிப்போன சாலைகள் ஒட்டுப்போடுவதை கைவிட்டது மாநகராட்சி

சென்னை, சென்னையில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகி மாறி, பல்லாங்குழி போல் காட்சியளிக்கின்றன. பராமரிப்பும் இல்லை; பேட்ச் ஒர்க் கூட இல்லாததால், புழுதி பறந்து, வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சவாலாகி, விபத்துகளுக்கு வழிவகுத்து வருகிறது. பள்ளத்தில் பஸ் ஏறி இறங்கியபோது, அதில் பயணித்த மூதாட்டி, சாலையில் விழுந்து இறந்த சோகமும், நேற்று நடந்துள்ளது.சென்னை மாநகராட்சியில், 387.35 கி.மீ., நீளமுள்ள பேருந்து சாலைகளும், 5,623 கி.மீ., நீளமுள்ள உட்புற சாலைகளும் உள்ளன. இச்சாலைகளை மாநகராட்சி பராமரித்து வரும் நிலையில், கடந்த, 2023ம் ஆண்டு மழைக்குப்பின், பல்வேறு இடங்களில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு, 4,204 தார் சாலைகள் சீரமைக்கப்பட்டன.தற்போதைய வடகிழக்கு பருவமழையிலும் சாலைகள் சேதமடைந்தன. பெரும்பாலான பேருந்து தட சாலைகளில், ஆங்காங்கே குண்டும், குழியுமாக பல்லாங்குழிபோல் சாலைகள் காட்சியளிக்கின்றன. இதற்கு முன், மழை பெய்யும்போதே மாநகராட்சி சார்பில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், பேட்ச் ஒர்க் என்ற தற்காலிக சாலை ஒட்டு பணி மேற்கொள்ளப்படும். பின், மழைக்காலம் முடிந்தப்பின், சாலை முழுதாக சீரமைக்கப்படும். இதற்காக, மண்டல அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.இந்தாண்டும் மண்டல அளவில், மழைக்கால தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தகால மழையைவிட, தற்போது மழை மற்றும் புயல் பாதிப்பு சென்னைக்கு குறைவு.அதேநேரம், மழையால் பெரும்பாலான பிரதான சாலைகள் பல்லாங்குழியாக மாறி, வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்துள்ளன.அதேபோல், பல்லாங்குழி சாலைகளில் மண், ஜல்லி பெயர்ந்து புழுதி ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் கண்களை கலங்கடித்து வருகின்றன. புழுதியை கட்டுப்படுத்தும் பணியிலும், மாநகராட்சி மெத்தனமாக செயல்பட்டு வருவதால், விபத்துக்கள் தொடர்கதையாகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்.சென்னையில், மழைக்காலம் முடிய உள்ளது. வரும், ஜனவரிக்குப்பின் சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு, முழுமையாக சீரமைக்கப்பட இருப்பதால், தற்காலிக ஒட்டு பணிகள் வேண்டாம் என, மாநகராட்சி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனவே தான், 'பேட்ச் ஒர்க்' செய்யவில்லை.சேதமடைந்த சாலைகள் எவ்வளவு துாய்மை படுத்தினாலும், அங்கு மீண்டும் புழுதி தான் பறக்கிறது. சாலைகள் சீரமைப்புதான் இதற்கு தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்..இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ் படிக்கட்டில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா, 64. இவர், நேற்று காலை அரக்கோணத்தில் உள்ள மகன் வீட்டிற்கு செல்ல, தடம் எண்: '77 இ' அரசு பேருந்தில் பயணித்தார்.காலை நேரம் என்பதால், பேருந்தில் 102 பெண்கள் உட்பட, 136 பேர் பயணித்தனர். பேருந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி, 58, என்பவர் ஓட்டினார். எல்லா சாலைகளையும் போல, பேருந்து சென்ற சாலையும் பல்லாங்குழியாக இருந்தது.ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் அருகே, பேருந்து சாலை பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, துாக்கிப்போட்டதில் படிக்கட்டு அருகே நின்றிருந்த கிரிஜா, சாலையில் துாக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

chennai sivakumar
டிச 24, 2024 19:31

செவிடன் காதில் ஊதிய சங்கு போல scrap செய்து 3 மாதம் ஆகியும்.விடியல் இல்லை.


N.Purushothaman
டிச 24, 2024 14:51

பேஸ் கோர்ஸ் Base Course அடிச்சிக்கிட்டு போனதுக்கப்புறம் அது கூட தெரியாமல் சும்மா மேம்போக்கா கல்லையும் தாரையும் கலந்து போட்டா எப்படி நிக்கும் ? இந்த வெங்காயத்துல டெண்டர் எல்லாத்தையும் ரெட்டை இலை ஆளுங்க எடுத்திடறாங்கன்னு சமூகநீதி காத்தான்கிட்ட அவிங்க ஆளுங்க புகார் வேற கொடுக்கிறானுங்க ....என்ன கருமம்டா இது ?


GS kumar
டிச 24, 2024 12:45

ஒன்னுமே புரியல... ரோடு ஒரு முறை போட்டா ஆறு மாத காலம் கூட தாங்கலைன்னா, நம்ம ஆளுங்க லுக்கு ரோடு போட தெரியாதா, இல்ல சரியான ஆளுங்க கிட்ட கொடுத்து போட மாட்டுங்கறாங்கலா. நல்ல கம்பெனி க்கு காண்ட்ராக்ட் கொடுத்தா தரமான ரோடு கிடைக்கும். இயற்க்கை வளம் ஆனா மலை , மணல் அனைத்தும் தேவை பொறுத்து உபயோகிக்கலாம். அரசு ரௌடிகளுக்கு உரிமை கொடுக்காமல் நல்ல தரமான கம்பெனிக்கு கொடுத்து ரோடு தரம் உயர்த்த யோசிக்க வேண்டும்...


V. SRINIVASAN
டிச 24, 2024 11:56

சென்னையில் பெரும்பாலான சாலைகள் அல்ல எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக தான் உள்ளது உயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


sridhar
டிச 24, 2024 10:29

அடுத்த மழைக்காலம் இன்னும் பத்தே மாதங்களில் வருவதால் அதன் பிறகு தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள் .


புதிய வீடியோ